புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த 24 வயதான ஏழுமலை (என்கிற சூர்யா), இருசக்கர வாகன மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். அவரும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த 21 வயதான சுவேதாவும் காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜீவானந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவம் நடந்த இன்று காலை, ஏழுமலையின் வீட்டில் இருந்து சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சுவேதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தன்வந்திரி போலீசார், சுவேதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுவேதாவின் நடத்தை மீது சந்தேகமடைந்த ஏழுமலை, அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சுவேதா அதிக நேரம் செல்போனில் பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் கண்டித்த ஏழுமலை, அவருக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனினும் சுவேதா தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இன்று காலை ஏழுமலை தூங்கி எழுந்தபோதும் சுவேதா செல்போனில் மூழ்கியிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த ஏழுமலை, முதலில் சார்ஜர் ஒயரால் அவர் கழுத்தை இறுக்கியும், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பின் தலைமறைவான ஏழுமலையைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மனைவியின் செல்போன் பயன்பாட்டால் ஏற்பட்ட சந்தேகம் ஒரு உயிரைப் பறித்ததோடு, மூன்று வயதுக் குழந்தையைத் தாயில்லாமலும், தந்தை சிறைக்குச் செல்லும் நிலையிலும் தவிக்கவிட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலை பிடிபட்ட பிறகே இந்த கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
