லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) டிஜிபி பொறுப்பிலிருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயுதப்படை டிஜிபியாக இருந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பே லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பைக் கவனிக்கும் வகையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது நிர்வாக ரீதியாகப் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சந்தீப் மிட்டல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் ஆதரவாளராகச் செயல்படுவதால், அவரை லஞ்ச ஒழிப்புத் துறைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுகவின் டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருந்தார். இந்த அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
