கடலுக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆபத்து…. ஈரான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்…. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘டெக்னிக்கல்’ ஷாக்…. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்…!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடக்கத்தில் ஈரான் பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின் மிக முக்கிய நோக்கமாக ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது முன்னிறுத்தப்பட்டாலும், அங்கு ஈரான் விதைத்துள்ள கடல் கண்ணிவெடிகள் தற்போது மிகப்பெரிய தொழில்நுட்பச் சவாலாக உருவெடுத்துள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இந்தப் பாதையில் கடல் கண்ணிவெடிகளைப் பரப்பியது. இதனால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்ற பாதையில், தற்போது 10-க்கும் குறைவான கப்பல்களே பயணிக்கின்றன. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன், சர்வதேச விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், அவசர கதியில் சிறிய படகுகள் மூலம் சீரற்ற முறையில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதே ஆகும். அந்த கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என்பது குறித்த துல்லியமான வரைபடம் ஈரானிடம் இல்லை. மேலும், கடல் நீரோட்டத்தினால் கண்ணிவெடிகள் இடம் மாறியிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். அவற்றை நவீன தொழில்நுட்பம் இல்லாமல் கண்டறிந்து அகற்றுவது ஈரானுக்குச் சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே, ஒரு குறுகிய பாதையை மட்டும் திறந்து வைத்து, அதைப் பயன்படுத்த கப்பல்களிடம் ஈரான் வரி வசூலித்து வருகிறது.

   

தற்போது இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி ஆலோசனை நடத்தினார். அப்போது “தொழில்நுட்ப சிக்கல்கள்” காரணமாகவே நீரிணையை முழுமையாகத் திறக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டது, கண்ணிவெடிகளை அகற்ற முடியாத ஈரானின் இயலாமையையே காட்டுகிறது. இந்தத் தொழில்நுட்ப முட்டுக்கட்டை காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை எப்போது முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.