தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சென்னை, திருச்சி, நெல்லை எனப் பல மாவட்டங்களைத் தொடர்ந்து, இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனது பரப்புரையை முன்னெடுத்தார். இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் காரைக்குடிக்குச் சென்றார். காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் மற்றும் தேவர் சிலை சந்திப்பு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், காவல்துறையினர் 37 கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தனர். மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மதுரையிலிருந்து விஜய் தனது வாகனத்தில் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டபோது, ஆர்வமிகுதியால் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரசிகர்களின் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் மீதான அன்பினால் ரசிகர்கள் வாகனங்களைப் பின்தொடர்வது வழக்கமாக இருந்தாலும், இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடப்பது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது ஒவ்வொரு பயணத்தின்போதும் “என்னை யாரும் பின்தொடர வேண்டாம்” எனத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். இருப்பினும், உற்சாக மிகுதியில் விதிமுறைகளை மீறிச் செல்லும் ரசிகர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வது கட்சிக்கும் அதன் தலைவருக்கும் தேவையற்ற நெருக்கடியையும் கெட்ட பெயரையும் உருவாக்கி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஆதரவைத் தெரிவிக்குமாறு தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
