தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளிடையே பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடி முன்னெடுக்கும் பிரச்சார முறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடியைத் தொடர்ந்து, இன்று காரைக்குடியிலும் நாளை கடலூரிலும் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். கடலூரில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
அதே தினத்தில் கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அனுமதி கோரியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணைய விதிகளின்படி முதலில் விண்ணப்பிப்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், உதயநிதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிரச்சாரக் குழுவினர் முன்கூட்டியே அனுமதி பெற்றுவிட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஒரே நாளில் ஒரே மாவட்டத்தில் இரு முக்கியத் தலைவர்களின் பிரச்சாரம் அமையவிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் வருகைக்காக அக்கட்சியினர் உற்சாகத்துடன் தயாராகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் மாற்றுத் திட்டம் என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
