“ஈரான் – அமெரிக்கா” போர் நிறுத்தத்திற்கு நடுவே டிரம்ப் போட்ட ‘ஸ்கெட்ச்’… சிக்கப்போகும் ஐரோப்பிய நாடுகள்?… உலக நாடுகளே உற்று நோக்கும் ஹார்முஸ் ஜலசந்தி..!

By Nanthini on சித்திரை 10, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி, இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளைப் பொறுப்பேற்கச் செய்ய டிரம்ப் திட்டமிடுகிறார். வெறும் ஆதரவு அறிக்கைகளை வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாதுகாப்பதற்கான விரிவான செயல் திட்டங்களை அடுத்த சில நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் நேட்டோ அமைப்பை வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்த டிரம்ப், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதில் நட்பு நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்திலும் இது குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர், அமெரிக்கா மட்டுமே ராணுவச் சுமையைச் சுமக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய கேந்திரமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க ஐரோப்பிய நாடுகளின் நேரடி ராணுவப் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

   

தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் நிலவும் பதற்றமான சூழல், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 14 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், களத்தில் தாக்குதல்கள் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக, ஹார்முஸ் நீரிணை இன்னும் மூடப்பட்ட நிலையிலேயே இருப்பதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் பெரும் இழுபறி நீடிக்கிறது.

   

முன்னதாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தபோது, பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பல ஐரோப்பிய நாடுகள் நேரடியாகத் தலையிடத் தயக்கம் காட்டின. இந்தத் தயக்கமே அமெரிக்காவுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இப்போது போர்நிறுத்தக் காலம் முடிவதற்குள், ஐரோப்பிய நாடுகள் கப்பல்களைப் பாதுகாக்க முன்வராவிட்டால், உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.