வெனிசுலா, கிரீன்லாந்து மற்றும் ஈரான் என அடுத்தடுத்து போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களில் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தரவுகள் கவலையளிக்கும் வகையில் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வெறும் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய மூன்றாவது காலாண்டில் இருந்த 4.4 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய சரிவாகும். சந்தை வல்லுநர்கள் 0.7 சதவீத சரிவை எதிர்பார்த்திருந்த நிலையில், அதைவிட மோசமான நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது தனியார் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகும். போர் பதற்றங்கள் மற்றும் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, வணிக நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் நுகர்வோர் செலவினமும் (Consumer Spending) 3.5 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. உள்நாட்டுத் தனியார் கொள்முதல் வளர்ச்சி 4.5 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாகச் சரிந்துள்ள நிலையில், இந்த மந்தநிலை அனைத்துத் துறைகளிலும் பரவலாக எதிரொலிக்கிறது.
அரசு ஊழியர் பணிநீக்கம் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் இந்தத் தரவுகள் வெளியாகத் தாமதமானாலும், தற்போது கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் 2026ஆம் ஆண்டை அமெரிக்கா ஒரு பலவீனமான நிலையில் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானுடனான நேரடிப் போர் பதற்றங்கள் உச்சமடைவதற்கு முன்பே பொருளாதாரம் இவ்வளவு பலவீனமாக இருந்தது, வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ள 2026-ன் முதல் காலாண்டு தரவுகளை நோக்கி தற்போது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.
தற்போதைய சூழல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிக்கு (Federal Reserve) மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும், மறுபுறம் மந்தமடைந்து வரும் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய நெருக்கடியிலும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளனர். டிரம்ப் எடுக்கும் போர் தொடர்பான அதிரடி முடிவுகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சரியும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டு வருவது என்பது தற்போதைக்கு அமெரிக்காவிற்கு இமாலயப் பணியாகவே தெரிகிறது.
