ராஜஸ்தான் மாநிலம் ரணதம்போர் தேசிய பூங்காவில், சுற்றுலாப் பயணிகளின் வாகன நெரிசலில் சிக்கி ஒரு புலி தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காடுகளுக்குள் செல்லும் சுற்றுலா வாகனங்கள் விலங்குகளின் நடமாட்டத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை விதியை மீறி, புலியைச் சுற்றி ஏராளமான ஜீப்புகள் முற்றுகையிட்டன. தப்பித்துச் செல்ல வழியின்றி தவித்த அந்தப் புலி, இறுதியில் ஜீப்புகளுக்கு இடையே இருந்த மிகக் குறுகிய இடைவெளி வழியாகத் தாவிப் புதருக்குள் மறைந்தது.
மேலும் விலங்குகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த மனிதத் தலையீட்டைப் பார்த்த நெட்டிசன்கள், “காட்டிலும் இப்படியா போக்குவரத்து நெரிசல்?” என்று தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மட்டுமன்றி, விலங்குகளின் மனநலனையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் புலி ஒருவேளை ஆக்ரோஷமடைந்திருந்தால் பெரிய விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும், இது போன்ற விதிமீறல்களைத் தவிர்க்க சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ‘சுற்றுலா’ என்ற பெயரில் வனவிலங்குகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து அவற்றை அச்சுறுத்தும் இத்தகையச் செயல்கள் மனிதநேயமற்றவை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
