ஆதார் அட்டை என்பது தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆவணமாக மாறிவிட்டது. இதில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் அவசியம், குறிப்பாக மொபைல் எண் இணைப்பு என்பது பல சேவைகளுக்கு அடிப்படையாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை mAadhaar செயலி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் mAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள “Mobile Number Update” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு மாற்ற வேண்டிய புதிய மொபைல் எண்ணை உள்ளீட்டு, அந்த எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பதிவிட வேண்டும். பின்னர், முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் பயனரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதும், 3 முதல் 5 நிமிடங்களுக்குள் மொபைல் எண் புதுப்பித்தல் செயல்முறை எளிதாக நிறைவடையும்.
இருப்பினும், கைரேகை, கருவிழி ஸ்கேன் (Iris Scan), பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற முக்கியமான பயோமெட்ரிக் விவரங்களை மாற்ற வேண்டுமானால், பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் இப்போதும் அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியது கட்டாயமாகும். இந்த ஆன்லைன் வசதி கிராமப்புற மக்களுக்கும், அவசரத் தேவை இருப்பவர்களுக்கும் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
