சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வேட்புமனு பரிசீலனையின் போது திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நான்காவது முறையாக களம் காண்கிறார். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 36 பேர் இந்தத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கிய போது, எடப்பாடி பழனிசாமியின் மனு முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருண்குமார், பரிசீலனைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தபோது திடீரென மாயமானார். அலுவலகத்திற்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததாலும், அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததாலும் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தவெக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, வேட்பாளரை தேடி கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது.
மற்றொரு திருப்பமாக, எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காசியின் வேட்புமனு பரிசீலனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவில் உள்ள கையெழுத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சேலம் திமுக எம்.பி செல்வகணபதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆளுங்கட்சி வேட்பாளரின் மனுவே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், புதிய வரவான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மாயம் மற்றும் திமுக வேட்பாளரின் மனு நிறுத்தி வைப்பு போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 36 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இச்சம்பவங்கள் எடப்பாடி தொகுதியை ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் விஐபி தொகுதியாக மாற்றியுள்ளது.
