உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது சுமத்தியுள்ள வரதட்சணைக் கொடுமை மற்றும் மருத்துவ மோசடி குறித்த புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2023-ல் லக்னோவைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவரைத் திருமணம் செய்த அந்தப் பெண்ணிற்கு, திருமணத்தின் போது 8 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த கார் உள்ளிட்டவை சீதனமாக வழங்கப்பட்டன. ஆனால், திருமணத்திற்கு முன்பே தனது கணவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததை மறைத்துத் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் சகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் பாலியல் உறவில் ஆர்வம் காட்டாமல் இருந்ததோடு, மாமியார் மற்றும் மாமனார் தனது அந்தரங்கத்தில் தலையிட்டு மனரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்பாராதவிதமாக கணவரின் மருத்துவக் கோப்புகளைக் கண்டெடுத்தபோது, அவர் டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்துத் தட்டிக்கேட்டபோது, கணவரின் சிகிச்சைக்காகப் பெண்ணின் வீட்டிலிருந்து 30 லட்சம் ரூபாய் வாங்கி வர வேண்டும் அல்லது தனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாக வழங்க வேண்டும் எனப் புகுந்த வீட்டினர் மிரட்டியதாகப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 அக்டோபர் மாதம் புகுந்த வீட்டிலிருந்து வெளியேறிய அந்தப் பெண், தனது நகைகளை அவர்கள் பறித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது கான்பூரில் வசித்து வரும் அவர் அளித்த புகாரின் பேரில், நிஷாந்த் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மூத்த காவல் அதிகாரி அபிஷேக் பாண்டே தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
