உலக அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்குள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கான உடன்படிக்கைக்கு ஈரான் வராவிட்டால், அந்நாட்டை “ஒரே இரவில்” அழித்துவிடுவேன் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணிக்குள் எரிசக்தி தடையின்றி செல்வதை உறுதி செய்யும் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்பதே டிரம்பின் தற்போதைய நிபந்தனையாக உள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஈரானின் தலைவர்கள் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினாலும், அதன் முடிவு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதாகத் தெரிவித்தார். தற்காலிகப் போர் நிறுத்தத் திட்டங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ள ஈரான், தற்போதுள்ள மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் உடனிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு தெற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்த இரு அமெரிக்க வீரர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டனர். அந்த வீரர்களின் துணிச்சலைப் பாராட்டிப் பேசிய டிரம்ப், அதே சமயம் ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகக்கடுமையான தாக்குதலைத் தொடுக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்” என்று திங்களன்று பேசிய டிரம்ப், தனது எச்சரிக்கையை மீறினால் இரான் மீண்டும் “கற்காலத்திற்கு” தள்ளப்படும் என்று மிகத் தீவிரமான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் இந்த விவகாரம், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அதிரடி காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகமும் மத்திய கிழக்கு நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகளை உற்றுநோக்கி வருகிறது.
