“தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தீர்ப்பு”… அந்த பெண் போலீஸ் செய்த துணிச்சலான காரியம் தான் இந்த தீர்ப்புக்கு காரணமா?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!

By Nanthini on சித்திரை 7, 2026

Spread the love

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததற்காகத் தந்தை ஜெயராஜையும், மகன் பென்னிக்ஸையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு விடிய விடிய அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். “அரிதிலும் அரிதான” இந்த வழக்கில், காவல் நிலைய மரணங்கள் இனி நிகழக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் போலீசாருக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் தடயங்களும், நேரடி சாட்சியங்களும் மிக முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் படிந்திருந்த ரத்தக்கறைகள் மற்றும் காவல் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ தடயங்கள் போலீசாரின் அத்துமீறலை உறுதிப்படுத்தின. ஆசனவாயில் லத்தியைச் செலுத்தித் தாக்கியதில் ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளும், அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது பார்த்த பொதுமக்களின் சாட்சியங்களும் வழக்கின் போக்கை மாற்றின.

   

வழக்கின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அங்கு பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி மற்றும் பியூலா ஆகியோரின் துணிச்சலான சாட்சியமாகும். சக காவலர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் பல மணி நேரம் கொடூரமாகத் தாக்கப்பட்டதை அவர்கள் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்தனர். முக்கிய சாட்சியான ரேவதி தனக்கு இருந்த அச்சுறுத்தல்களையும் மீறி உண்மையை உரக்கச் சொன்னது, குற்றம் புரிந்த 9 போலீசாருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட மிக முக்கிய காரணமாக அமைந்தது.

   

இறுதியாக, கோவில்பட்டி சிறை அதிகாரிகள், சிறை மருத்துவர்கள் மற்றும் உயிரிழப்பதற்கு முன் அவர்களை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளால் மிகத் துல்லியமாகத் தொகுக்கப்பட்டன. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் செய்த சட்டமீறல்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், இந்த வழக்கில் பாரபட்சமின்றித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சாட்சிகள் அளித்த ஒத்துழைப்பே, பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது.