தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, பொதுமக்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மற்றும் மாதந்தோறும் நடத்தப்படும் ரேஷன் குறைதீர் முகாம்கள் ஆகியவை வரும் மே 4-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது பயனாளிகளுக்குப் பொருட்களை விநியோகிக்கவோ தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளதால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாகச் செய்யும் அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் TNPDS இணையதளம் மூலம் புதிய ரேஷன் கார்டுகளுக்குத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். அதேபோல், கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் தாராளமாக மேற்கொள்ளலாம். ஆனால், இந்த விண்ணப்பங்கள் மீதான இறுதிப் பரிசீலனை மற்றும் புதிய அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி ஆகியவை தேர்தல் முடிந்து, நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படும் மே 4-ம் தேதிக்குப் பிறகே தொடங்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
