மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு தடை விதித்துள்ள ஈரான், அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், கடந்து செல்லும் கப்பல்களுக்கு சுமார் 18 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் பயன்படுத்தும் சர்வதேச கடல் எல்லைக்கு மாற்றாக, புதிய பாதையை கண்டறிந்து இந்தியா உள்ளிட்ட நான்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ஷல் தீவுகள் கொடியுடன் வந்த ‘ஹாப்ருட்’ (Hapruut) மற்றும் ‘டால்கட்’ (Dalkat) ஆகிய இரு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல்கள், பனாமா கொடியுடன் வந்த ‘சோஹர்’ (Sohar) எனும் எல்.என்.ஜி கப்பல் மற்றும் இந்தியக் கொடியுடன் பயணித்த ‘எம்.எஸ்.வி கியுபா’ (MSV Quba) ஆகிய கப்பல்களே இந்த துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளன. ஈரானின் ராணுவ கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, இந்தக் கப்பல்கள் ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து பயணத்தை தொடர்ந்துள்ளன.
கடல் போக்குவரத்து ஆய்வு நிறுவனமான TankerTrackers தகவலின்படி, இந்தக் கப்பல்கள் முஸந்தம் தீபகற்பம் அருகே சென்றபோது, தங்களது இருப்பிடத்தை காட்டும் ‘டிரான்ஸ்பாண்டர்’ (Transponder) சிக்னல்களை அணைத்துவிட்டு ரகசியமாக பயணித்துள்ளன. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற டால்கட் மற்றும் ஹாப்ருட் கப்பல்கள், சர்வதேச கடல் பரப்பைத் தவிர்த்து ஓமன் நாட்டின் பிராந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் வழியாக தப்பிச் சென்றுள்ளன. ஏப்ரல் 3-ம் தேதி மஸ்கட் கடற்கரையில் இருந்து 350 கி.மீ தொலைவில் இந்தக் கப்பல்கள் மீண்டும் சிக்னல் வளையத்திற்குள் தென்பட்டன.
இந்தியக் கொடியுடன் பயணித்த ‘எம்.எஸ்.வி கியுபா’ கப்பல் மார்ச் 31 அன்று துபாயிலிருந்து புறப்பட்டு, ஓமனின் டிப்பா துறைமுகம் வழியாக இதே உத்தியைப் பயன்படுத்தி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளது. ஈரானின் கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ கட்டுப்பாடுகளால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தொடும் என்றும், உலகளவில் கடும் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், இந்த மாற்றுப் பாதை பயணங்கள் சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளன. இருப்பினும், ஈரானின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த பகுதியில் இத்தகைய “நைசான” நகர்வுகள் வரும் நாட்களில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
