டெல்லியை அடுத்த ஃபரிதாபாத்தில், தனது அக்காளின் காதலனைத் தங்கை மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 வயதான மனஸ் ராய் என்பவர், ரோஷன் நகர் பகுதியில் வசிக்கும் தனது காதலியைச் சந்திப்பதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு காதலியின் தந்தையுடன் மனஸ் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிற்கு வந்த காதலியின் தங்கை, தனது காதலன் அமன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மனஸ் ராயைத் தடுத்து நிறுத்தித் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலின் போது, அந்த இளம் பெண் தனது சட்டைப்பையிலிருந்து கத்தியை எடுத்து மனஸைத் தாக்கத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது காதலன் அமன் என்பவர் மனஸின் வயிற்றில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். மனஸுடன் வந்திருந்த நண்பர் ஹர்ஷ் இதனைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மனஸ் ராய் உடனடியாக டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளைஞரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஃபரிதாபாத் போலீசார் 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ், ரோஷன், ராகுல் மற்றும் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியான அமன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்த பின்னரே, அக்காளின் காதலனைக் கொலை செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
