உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் ரஹ்மத் நகரில், ஸிக்ரா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 பிப்ரவரி மாதம் அனஸ் அலி என்பவருடன் திருமணமான ஸிக்ரா, அன்று முதல் அவரது கணவர் மற்றும் மாமியார் வீட்டினரால் கூடுதல் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளார். உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது சகோதரனிடம் தொலைபேசியில் அழுதபடி பேசிய ஸிக்ரா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மாமியார் வீட்டார் ஏதோ ஒரு ‘அதிர்ச்சி’ காத்திருப்பதாக மிரட்டுவதாகவும் கூறி அஞ்சியுள்ளார்.
மறுநாள் காலை ஸிக்ரா சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கழுத்தில் நெரித்துக் கொல்லப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. “உன் குடும்பத்திற்கு நாளை ஒரு சர்ப்ரைஸ் தருவோம்” என மாமியார் வீட்டார் கூறிய மிரட்டல், ஸிக்ராவின் கொலையையே குறிப்பதாக அவரது சகோதரர் ஃபைசல் ஜமால் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை இரு குடும்பத்தாரும் பேசி சமரசம் செய்த போதிலும், வரதட்சணை பேராசையால் மாமியார், மாமனார் மற்றும் நாத்தனார் உள்ளிட்ட ஆறு பேர் இணைந்து இந்த கொடூரச் சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தடயவியல் ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸிக்ராவின் கணவர் அனஸ் அலி முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து சந்தேக நபர்களையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை தொடங்கிய ஓராண்டிற்குள்ளேயே வரதட்சணைப் பலியாக முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
