தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்குத் தொடர்ச்சியாகக் கடும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், சி.பி.எஸ்.இ (CBSE) நிர்வாகம் பத்தாம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இதன்படி, வரும் 2026 – 27 கல்வியாண்டில் முதற்கட்டமாக 6-ஆம் வகுப்பு வரை இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு, மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவானது, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 10-ஆம் வகுப்பு வரை முழுமையாகக் கட்டாயமாக்கப்பட உள்ளது. மாநில அரசின் இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டிற்கு மாறாக, மத்திய வாரியம் எடுத்துள்ள இந்த முயற்சி தமிழகக் கல்விச் சூழலில் புதிய விவாதங்களையும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளையும் மீண்டும் கிளப்பியுள்ளது.
