இயற்கையான உணவுப் பொருட்களைப் பல அடுக்கு முறைகளில் பதப்படுத்தி, செயற்கை நிறங்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘அல்ட்ரா ப்ராசஸ்டு’ உணவுகள் இதய ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. சிப்ஸ், பிஸ்கட், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்ற இந்த உணவு வகைகளில் சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அளவுக்கு அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் அழற்சி ஏற்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைவதோடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற தீவிரப் பாதிப்புகள் உண்டாகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் சுமார் 66.8 சதவீதம் வரை அதிகரிப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
இந்த வகை உணவுகள் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை வேகப்படுத்துகின்றன. மேலும், இவற்றில் உள்ள அதிகப்படியான சோடியம் இதயத்திற்குப் கூடுதல் அழுத்தத்தைத் தந்து உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே, இதயத்தின் ஆயுளைக் காக்கப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நார்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்ற இயற்கை உணவுகளுக்கு மாறுவது அவசியமாகும். ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும், இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் வீட்டு உணவுகளே சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
