கரூரில் திமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். குறிப்பாக, கரூர் மாநகராட்சி 24-வது வார்டு திமுக உறுப்பினரும், முன்னாள் பகுதிச் செயலாளருமான அன்பரசன் மற்றும் கரூர் மாவட்ட மதிமுக முன்னாள் பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் இபிஎஸ்ஸின் தலைமையை ஏற்று அக்கட்சியில் இணைந்தனர்.
தமிழகத்தில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, அமைதியான மாநிலமாக மாற்ற எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்திருப்பது கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
