கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி, அண்ணாமலை நகரில் வசித்து வரும் 83 வயது மூதாட்டி முத்துலெட்சுமி என்பவர், மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் வீட்டில் தனியாக வசித்து வந்த இவருக்கு, உறவினர்கள் தினமும் உணவு வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு வழங்கச் சென்ற உறவினர் ஒருவர், மூதாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மருத்துவப் பரிசோதனையில் அந்த மூதாட்டி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டி பேச முடியாத நிலையில் இருப்பதால், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு ஆரம்பத்தில் சவால்கள் நீடித்தன. இச்சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது ஒரு கும்பலால் நடத்தப்பட்ட வெறிச்செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான கும்பல் ஈடுபட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த கொடூரச் சம்பவம் குறித்த தகவல் பரவியதையடுத்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஊர் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பற்ற நிலையில் தனியாக இருந்த முதியவர் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
