அரசியல் ‘அரண்மனை’ ஆரம்பமே இப்படியா?… மேடையிலேயே சுந்தர் சி-க்கு டப்பிங் கொடுத்த ஏ.சி.சண்முகம்… கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும், புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் பிரபல சினிமா இயக்குநரும், பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்புவின் கணவருமான சுந்தர் சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவின் மூத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகக் கடும் சவாலை அளிக்கும் நோக்கில் இவரைத் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி இறக்கியுள்ளது.

மதுரையில் முதன்முறையாக வேட்பாளராகச் செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தர் சி, மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மக்களின் ஆதரவாலும் தாம் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு பேசினார். சினிமாவுக்காகப் பல பேட்டிகள் கொடுத்திருந்தாலும், அரசியல் களம் தமக்கு முற்றிலும் புதிது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், செய்தியாளர் சந்திப்பின்போது தனது கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் பெயர்களைக் வரிசையாகக் குறிப்பிடுவதில் அவர் கடும் தடுமாற்றத்தைச் சந்தித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

   

கூட்டணித் தலைவர்களின் பெயர்களைச் சொல்லத் தெரியாமல் சுந்தர் சி தவித்தபோது, பின்னால் இருந்த புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஒவ்வொரு பெயராக எடுத்துக் கொடுத்தார். அமமுக என்பதற்குப் பதிலாக ‘அமுமுக’ என்று தவறாகக் குறிப்பிட்டதுடன், ஜான் பாண்டியன் மற்றும் திருமாறன் போன்ற தலைவர்களின் கட்சிப் பெயர்களைச் சொல்ல முடியாமல் திணறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ஒரு இயக்குநருக்கே டப்பிங் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதே” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.