“ரேபிஸ் ஊசி போடாத 16 வயது மாணவி… மகளைப் பறிகொடுத்து கதறும் குடும்பம்… மதுரையில் அரசே செய்த இறுதிச்சடங்கு…!!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ரெடிமேட் பின்னலாடைத் தொழிலாளி செல்வகுமாரின் மகள் செல்வசுஹாசினி (16), வீட்டில் வளர்த்த செல்லப் பிராணியான நாய்  கீறியதால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அதன் நகம் பட்டு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒரு சாதாரணக் கீறல் என்று கருதி மாணவி அலட்சியப்படுத்தியதோடு, முறையான மருத்துவ ஆலோசனையையோ அல்லது ரேபிஸ் தடுப்பூசியையோ செலுத்திக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கீறியதன் மூலம் ரேபிஸ் விஷம் உடல் முழுவதும் பரவியிருப்பதை உறுதி செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாணவி செல்வசுஹாசினி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

மகளின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்த பெற்றோர் உடலைப் பெற்றுக்கொள்ள முன்வராத நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவியின் உடல் தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக இருந்தாலும், அவை கடித்தாலோ அல்லது கீறினாலோ அலட்சியம் காட்டாமல் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இந்தத் துயரச் சம்பவம் உணர்த்தியுள்ளது. ஒரு சிறு கீறல்தானே என்று காட்டிய அலட்சியத்தால் ஒரு இளம் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.