2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் (த.மா.கா.), அதிமுக தலைமைக்கும் இடையே ‘தேர்தல் நிதி’ தொடர்பாக எழுந்துள்ள சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் வலுவான திமுக வேட்பாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி கேட்டு ஜி.கே.வாசன் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் அமைச்சர் சக்கரபாணி, முத்துசாமி மற்றும் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போன்ற பெரும் புள்ளிகளை த.மா.கா. வேட்பாளர்கள் எதிர்க்க வேண்டியுள்ளது. இத்தகைய பணபலம் மிக்க ஜாம்பவான்களைச் சமாளிக்க ‘பணபலம்’ அவசியம் என்பதால், தொகுதிக்கு 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 25 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் ஜி.கே.வாசன் தொலைபேசி வாயிலாகக் கோரிக்கை வைத்துள்ளார்.
இருப்பினும், வாசனைப் பேச அனுமதித்த எடப்பாடி பழனிசாமி, நிதியுதவி அளிக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. “த.மா.கா. வேட்பாளர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தேர்தல் செலவுகளைக் கட்சி ஏற்றிருக்கும்; ஆனால் நீங்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் நிற்பதால், அந்த உதவியை டெல்லியிடம்தான் (பாஜக) கேட்க வேண்டும்” என்று அவர் கையை விரித்துவிட்டதாக த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துவக்கத்தில் இரட்டை இலையில் போட்டியிடச் சம்மதித்த வாசன், பின்னர் பாஜக தலைமையின் அழுத்தம் காரணமாகத் தாமரை சின்னத்திற்கு மாறியது இப்போது நிதி நெருக்கடியில் முடிந்துள்ளது.
இந்தச் சிக்கலால் செய்வதறியாது திகைத்த ஜி.கே.வாசன், தற்போது நிதி உதவிக்காக பாஜகவின் தேசியத் தலைமையைத் தொடர்புகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, “தேர்தல் நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான செலவுகளை நேரடியாகக் கவனிப்பதா அல்லது கட்சித் தலைமையிடம் ஒப்படைப்பதா என்பது குறித்த தெளிவான உத்தரவு இன்னும் வரவில்லை” என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் த.மா.கா. வேட்பாளர்கள் தேர்தல் பணிகளைத் தொடங்க முடியாமல் நிதி வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
