ஆண்டுக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை செய்து, ஒரு கோடி ரூபாய் வரை ஊதியம் ஈட்டும் ஒரு வியக்கத்தக்க வேலையைப் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘டவர் லான்டர்ன் சேஞ்சர்’அல்லது ‘டவர் கிளைம்பர்’ என்று அழைக்கப்படும் இந்த வேலையில், சுமார் 1,500 முதல் 2,000 அடி உயரம் கொண்ட மிக உயரமான கோபுரங்களின் உச்சியில் ஏறி மின்விளக்குகளை மாற்ற வேண்டும்.
இந்த கோபுரங்கள் மேகங்களுக்கு மேலாக இருப்பதால், அங்கு நிலவும் அதிவேகக் காற்று மற்றும் உயிரிழப்பு அபாயங்களுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து இந்த பணியைச் செய்ய வேண்டும் என்பதால், இதற்கு மிக அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டு முழுவதும் எரியும் இந்த விளக்குகளின் ஆயுட்காலம் குறைவதால், வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இவை மாற்றப்படுகின்றன. ஒருமுறை விளக்கை மாற்ற சில மணிநேரங்களே ஆகும் என்றாலும், அந்தச் சிறு தவறும் மரணத்தை விளைவிக்கும் என்பதால் இதற்கான இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மிகவும் கடினமானவை.
மேலும் ஏசி அறையில் அமர்ந்து வேலை செய்யும் நம்மில் பலருக்கு, வெறும் இரண்டு நாள் உழைப்பில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், அந்த 2,000 அடி உயரத்தில் இரும்புத் தூணைப் பிடித்துக்கொண்டு காற்றில் ஊசலாடும் துணிச்சலும் உடல் வலிமையும் கொண்ட சிலரால் மட்டுமே இந்தச் சாதனையைப் புரிய முடிகிறது.
