அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ‘அருணோதய்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ₹1,250-லிருந்து ₹3,000 ஆக உயர்த்தப்படும் என முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மகளிர் நலன் மட்டுமல்லாது, பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் சார்ந்த அதிரடி வாக்குறுதிகளையும் பாஜக முன்வைத்துள்ளது. குறிப்பாக, ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பழங்குடியின பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தின் மற்ற இடங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 31 முக்கிய வாக்குறுதிகள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
