ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்பெயின் நாடு தனது வான்பரப்பை அமெரிக்கப் போர் விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த போரை “சட்டவிரோதமானது மற்றும் அநீதியானது” என்று விமர்சித்துள்ளார். ஏற்கனவே ஸ்பெயினில் உள்ள ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பையும் பயன்படுத்த முடியாது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயினின் இந்த அதிரடி முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் இத்தகைய நடவடிக்கை நேட்டோ (NATO) கூட்டணிகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்பெயின் உடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு நேட்டோ நட்பு நாடே அமெரிக்காவிற்கு எதிராக இத்தகைய தடையை விதித்துள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
