தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக 164 தொகுதிகளிலும், அதிமுக 168 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 121 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. குறிப்பாக, சென்னையில் உள்ள 15 தொகுதிகளில் 12 இடங்கள் உட்பட, தமிழகத்தின் வடக்கு முதல் தெற்கு வரை பிரதான இரு திராவிட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த முறை தமிழக தேர்தல் களம் ஐந்து முனைப் போட்டியைச் சந்திக்கிறது. திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ராமதாஸ் – சசிகலா அணி என ஐந்து தரப்புகள் களத்தில் உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றில் கொளத்தூர், எழும்பூர், ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுவது தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மற்றும் வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, எடப்பாடி, ஓசூர், நாமக்கல், வேலூர், ஆற்காடு மற்றும் கோயம்புத்தூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மல்லுக்கட்டுகின்றன. அதேபோல், காவிரி டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் முக்கிய தொகுதிகளிலும் உதயசூரியன் – இரட்டை இலை சின்னங்களுக்கு இடையே நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் களம் காண்பதால் இப்பகுதிகளில் தேர்தல் களம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களிலும் இந்த நேரடிப் போட்டி குறையவில்லை. மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 121 தொகுதிகளின் பட்டியலில் அடங்கும் முக்கிய இடங்கள் உள்ளன. குறிப்பாக மதுரை மேற்கு, போடிநாயக்கனூர் மற்றும் கோவில்பட்டி போன்ற தொகுதிகளில் நிலவும் நேரடிப் போட்டி, தமிழகத்தின் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து முனைப் போட்டி நிலவினாலும், இந்த 121 தொகுதிகளில் திமுக – அதிமுக இடையே நிலவும் நேரடி மோதலே தேர்தலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
