2,300 கிலோ போதைப்பொருள் எங்கே..? “மொத்தத்தையும் எலி தின்னுடுச்சு” சிஏஜி (CAG) ரிப்போர்ட்டில் வெளியான பகீர் தகவல்…!!

By Soundarya on பங்குனி 28, 2026

Spread the love

குஜராத் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் மாயமானது குறித்து அரசு அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம் பெரும் அதிர்ச்சியையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (CAG) அறிக்கையின்படி, அக்டோபர் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஒரு பெரும் பகுதி காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இந்த இழப்பிற்கு “எலிகள் போதைப்பொருளைத் தின்றுவிட்டன” என்று அதிகாரிகள் வினோதமான காரணத்தைக் கூறியுள்ளனர்.

சிஏஜி அறிக்கையின் புள்ளிவிவரங்களின்படி, குஜராத் காவல்துறை மொத்தம் 6,510 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், விதிமுறைப்படி 4,177 கிலோ மட்டுமே அழிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் எங்கே போனது என்ற கேள்வி எழுந்தபோது, உள்துறை அமைச்சகம் மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்தது. எலிகள் மற்றும் பூச்சிகள் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைச் சேதப்படுத்திவிட்டதாகவும், ஈரப்பதம் காரணமாகப் போதைப்பொருளின் எடை குறைந்துவிட்டதாகவும், சில இடங்களில் போதைப்பொருள் திருடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   

இருப்பினும், இந்த விளக்கங்களைச் சிஏஜி கடுமையாக நிராகரித்துள்ளது. 35 சதவீதத்திற்கும் அதிகமான போதைப்பொருள் மாயமாவதற்கு இயற்கை காரணங்களோ அல்லது எலிகளோ மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கிடங்குகளில் (Malkhanas) முறையான கண்காணிப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குஜராத் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குளறுபடிகளை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.