Breaking: “காங்கிரஸ் விற்பனைக்கு”… ஜோதிமணி எம்.பி-யின் அதிரடி ட்வீட்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

By Nanthini on பங்குனி 28, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் ஜுரம் உச்சமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள அதிருப்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு, கட்சியின் மாநிலத் தலைமை மற்றும் தொகுதிப் பங்கீட்டு குழுவின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது. தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும், கட்சியின் நலன் முழுமையாக சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜோதிமணியின் பதிவில் உள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டு, “கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாத சிலர், தொண்டர்களின் உழைப்பை விற்றுத் தின்பது வேதனையளிக்கிறது” என்பதாகும். இது மறைமுகமாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விசிகவில் இருந்து காங்கிரசுக்கு வந்த செல்வப்பெருந்தகையின் தலைமையின் கீழ், தொகுதிப் பங்கீடு ரகசியமான முறையில் நடந்திருப்பதாகவும், உண்மையான விசுவாசிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்றும் ஜோதிமணி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

   

குறிப்பாக, வேட்பாளர் தேர்வும் இதே “விற்பனை அணுகுமுறையோடு” நடைபெற்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் யாராலும் காப்பாற்ற முடியாது என அவர் எச்சரித்துள்ளார். திமுக தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தங்களுக்குச் சாதகமான தொகுதிகளைப் பெறுவதில் தலைமை கோட்டை விட்டுவிட்டதாகக் கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். செல்வப்பெருந்தகை 25 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகக் கூறி வரும் நிலையில், ஜோதிமணியின் இந்தப் பதிவு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

   

தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் மற்றும் உட்கட்சி மோதல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஜோதிமணியின் இந்த ‘அட்டாக்’ டெல்லி மேலிடம் வரை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் தலைமை விளக்கம் அளிக்குமா அல்லது மேலிடம் தலையிட்டு சமரசம் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.