ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் தனது ஏவுகணைகளில் “இந்திய மக்களுக்கு நன்றி” (Thank you people of India) என்று எழுதித் தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்ற பெயரில் ஈரான் முன்னெடுத்து வரும் இந்த பதிலடித் தாக்குதலில், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து 83-வது முறையாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளின் மீது நீல நிறத்தில் எழுதப்பட்டுள்ள நன்றியறிவிப்பு வாசகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும், தற்போதைய போரில் இந்தியா எடுத்துள்ள நடுநிலைப்பாடும் இந்த நன்றியறிவிப்புக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் பக்கம் சாயாமல், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் ஆலோசித்த பிரதமர், போரினால் ஏற்படும் மனிதாபிமானச் சிக்கல்கள் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஈரானுக்குச் செய்து வரும் உதவிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்திய மக்கள் தங்களின் நகை மற்றும் பணத்தை நிதியுதவியாக வழங்கியதுடன், மத்திய அரசு சார்பில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்தத் தாராள மனப்பான்மையை ஈரான் ஒருபோதும் மறக்காது என அந்நாட்டுத் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதற்குப் பிரதிபலனாக, இந்தியாவுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றிச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதையில் இந்தியக் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஈரான் தனது நன்றியைச் செயலில் காட்டியுள்ளது. ஏவுகணைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் வெறும் அடையாளமாக மட்டுமில்லாமல், கடினமான காலத்திலும் இந்தியா வழங்கிய மனிதாபிமான ஆதரவிற்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
