தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது நீண்டகால கோட்டையான திருநெல்வேலி தொகுதியை விட்டு வெளியேறி, விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் பட்டியலில் திருநெல்வேலி இடம்பெறாதது இந்த ஊகங்களை உறுதிப்படுத்தியுள்ளது. கால் நூற்றாண்டு காலமாக நெல்லை அரசியலில் கோலோச்சிய நயினார் நாகேந்திரன், தற்போது தொகுதி மாறுவதற்குப் பின்னால் ஒரு விசித்திரமான தேர்தல் ‘பேட்டர்ன்’ மற்றும் அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அவர் ஒருமுறை வெற்றி பெற்றால் அடுத்த முறை தோல்வியைத் தழுவுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். 2001-ல் வெற்றி, 2006-ல் தோல்வி, மீண்டும் 2011-ல் வெற்றி, 2016-ல் தோல்வி எனத் தொடர்ந்த இந்த வரிசையில், கடந்த 2021 தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். இந்த ‘வெற்றி-தோல்வி’ சுழற்சி முறைப்படி பார்த்தால் வரும் தேர்தலில் அவருக்குச் சவால்கள் அதிகம் என்பதால், பாதுகாப்பான ஒரு முடிவாக அவர் தொகுதி மாறத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மாற்றத்திற்கு மற்றொரு முக்கியக் காரணமாகச் சாத்தூர் தொகுதியின் சமூகக் கட்டமைப்பு பார்க்கப்படுகிறது. சாத்தூரில் சுமார் 23 சதவீதத்திற்கும் அதிகமான தேவர் சமூக வாக்குகள் இருப்பதால், அது நயினார் நாகேந்திரனுக்குச் சாதகமாக அமையும் என அவர் நம்புகிறார். இதற்காகச் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் அந்தத் தொகுதியில் ரகசியமாகக் களப்பணிகளைத் தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், அதிமுக தனது பழைய கோட்டையான திருநெல்வேலியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டது அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே தெரிகிறது. விருதுநகர் மாவட்டத்தின் செல்வாக்குமிக்க அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நயினாரின் பழைய அரசியல் நண்பராக இருந்தாலும், தேர்தல் களத்தில் அவரை வீழ்த்த திமுக தலைமை சிறப்பு வியூகங்களை வகுக்கக்கூடும். ஜோதிடக் காரணங்கள் மற்றும் தேர்தல் ராசி எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் எடுக்கப்போகும் இந்த அரசியல் ரிஸ்க், அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமையும்.
