கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு மனைவியைக் கொல்ல முயன்ற கணவன் மற்றும் தொடர் கொலை மிரட்டல் விடுத்து வரும் அவரது குடும்பத்தினர் குறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி(33), கடந்த 2015-ம் ஆண்டு கடலூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சந்திரசேகரனுக்கு, அங்கு பணிபுரிந்த சரண்யா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில், இது குறித்துத் தட்டிக்கேட்ட ராஜேஸ்வரியை சந்திரசேகரன் கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தி வந்துள்ளார்.
சந்திரசேகரனுக்கு சரண்யா மட்டுமின்றி இன்னும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது ராஜேஸ்வரிக்குத் தெரியவந்தது. இது குறித்துத் தனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் முறையிட்டபோது, “அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்” என்று அவர்கள் ராஜேஸ்வரியையே இழிவாகப் பேசியுள்ளனர். இதற்கிடையில், “உன் பொண்டாட்டி உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது, அவளைக் கொன்றுவிடு” என்று சரண்யா சந்திரசேகரனிடம் பேசும் ஆடியோ ஆதாரங்கள் ராஜேஸ்வரிக்குக் கிடைத்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கணவர் சிறைக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலி சரண்யா, அவரது பெற்றோர்கள் மற்றும் சந்திரசேகரனின் குடும்பத்தினர் இணைந்து ராஜேஸ்வரியை மிரட்டத் தொடங்கியுள்ளனர். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் ராஜேஸ்வரியையும் அவரது குழந்தைகளையும் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சந்திரசேகரன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கடத்திக் கற்பழித்த குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் என்றும், தற்போது கைதாவதற்கு முன்பு சரண்யாவை ரகசியத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகவும் ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர் கொலை மிரட்டல்களால் உயிருக்கு அஞ்சி, தனது இரு குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ராஜேஸ்வரி, தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார். திருமண பந்தத்திற்குத் துரோகம் செய்ததோடு மட்டுமின்றி, மனைவியின் உயிரைப் பறிக்கத் துணிந்த கணவன் மற்றும் அவருக்குத் துணையாக இருக்கும் நபர்கள் மீதான இந்தப் புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
