மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த நான்கு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது உலகெங்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கவும் ஜப்பான் அரசு தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியிருக்கும் ஜப்பான், இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கத் தனது அவசரகால கையிருப்பில் இருந்து எண்ணெய்யை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை தனியார் துறை கையிருப்பில் இருந்து 15 நாட்களுக்கான எண்ணெய் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 30 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் விநியோகிக்கப்பட உள்ளது. நாடு முழுவதுமுள்ள 11 சேமிப்பு மையங்களிலிருந்து சுமார் 8.5 மில்லியன் கிலோலிட்டர் எண்ணெய்யை விற்கத் திட்டமிட்டுள்ள ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பராமரிக்கப்படும் கூட்டு இருப்பிலிருந்தும் விநியோகத்தை வேகப்படுத்தியுள்ளது.
எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையேற்றம் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்காமல் இருக்க ஜப்பான் அரசு மானியங்களையும் மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் பயனாக, லிட்டருக்கு 190.8 யென் என உச்சத்திலிருந்த பெட்ரோல் விலை தற்போது 177.7 யென் ஆகக் குறைந்துள்ளது. ஜப்பானிடம் சுமார் 254 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதால், இத்தகைய துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை அந்த நாடு உறுதி செய்து வருகிறது.
மறுபுறம், இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்ற ஆசிய நாடுகளைக் கலக்கமடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ஏற்கனவே எரிபொருள் அவசரநிலையை அறிவித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்க ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஜப்பானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு ஒரு வார காலத் தேவைக்கு மட்டுமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகளாவிய நெருக்கடி நீடித்தால், வளரும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது.
