புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள திருவுடையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா – லட்சுமி தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை விற்ற விவகாரம் ஒரு பெரும் குடும்பத் தகராறாக மாறியுள்ளது. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அனைவரும் திருமணமாகித் தனித்தனியே வசித்து வருகின்றனர். முதிய வயதில் தங்களது தேவைகளுக்காகத் நிலத்தை விற்ற இவர்களிடம், அவர்களது இளைய மகன் முருகன் “யாரைக் கேட்டு நிலத்தை விற்றீர்கள்?” எனக் கூறித் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
நிலத்தை விற்ற பணத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டு முருகன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் வம்பிழுத்துள்ளார். பெற்றோர் என்றும் பாராமல் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், மனரீதியாகத் துன்புறுத்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. மகனின் இந்தத் தொடர் தொல்லை மற்றும் மிரட்டல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முதிய தம்பதியினர், வேறு வழியின்றித் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
தகவலறிந்து வந்த வல்லத்திரக்கோட்டை காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சொத்துக்காகப் பெற்றோரைத் துன்புறுத்திய மகன் முருகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
