“ஜோதிடர் சொன்ன ஒற்றை வார்த்தை”… நெல்லையை விட்டு ஓடும் நயினார்… ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்…. நயினாரை நெல்லையில் இருந்து தூக்கியது யார்…?

By Nanthini on பங்குனி 26, 2026

Spread the love

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த 25 ஆண்டுகளாகத் தனது கோட்டையாகக் கருதிய திருநெல்வேலி தொகுதியை விடுத்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் தனது சொந்தத் தொகுதியை அதிமுகவிற்கே விட்டுக்கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2001 முதல் ஐந்து முறை நெல்லையில் களம் கண்டு மூன்று முறை வெற்றி பெற்ற அவர், இந்த முறை பின்வாங்குவதற்குப் பின்னால் வலுவான அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி முடிவுக்கு முதல் முக்கிய காரணமாக, திமுகவின் கடும் வியூகம் பார்க்கப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற இலக்கோடு, முதல்வர் ஸ்டாலின் அந்தத் தொகுதியின் பொறுப்பை அமைச்சர் கே.என். நேருவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. திமுகவின் இந்த ‘ஸ்பெஷல் அசைன்மென்ட்’ மற்றும் ஆளுங்கட்சியின் கடும் எதிர்ப்பைச் சமாளிப்பதை விட, பாதுகாப்பான வேறொரு தொகுதியைத் தேர்ந்தெடுப்பதே நலம் என அவர் கருதியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

   

இரண்டாவதாக, தொகுதியின் வாக்கு வங்கி சமன்பாடுகள் அவருக்குச் சவாலாக மாறியுள்ளன. திருநெல்வேலி தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையின வாக்குகளைப் பெறுவதில் பாஜக தலைவராக அவர் சந்திக்கும் சிக்கல்களும், புதிதாகக் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கக்கூடிய இளைஞர் வாக்குகளும் நயினார் நாகேந்திரனின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், தனது சமூக வாக்குகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலம் அதிகம் உள்ள சாத்தூர் போன்ற தொகுதிகளில் களம் இறங்குவது வெற்றியை உறுதி செய்யும் என அவர் நம்புகிறார்.

   

இவை அனைத்திற்கும் மேலாக, ‘ஆறு’ என்ற எண் மீதான சென்டிமென்ட் மற்றும் ஜோதிட ரீதியான ஆலோசனைகளும் இந்த முடிவில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயினார் நாகேந்திரன் இதற்கு முன் போட்டியிட்ட ஆண்டுகளில் 6 என முடிந்த 2006 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளார். தற்போதைய 2026-ம் ஆண்டும் அதே எண்ணில் முடிவதால், ஜோதிடரின் அறிவுரைப்படி ராசியில்லாத தொகுதியை மாற்ற அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, நெல்லைத் தொகுதியை அதிமுகவின் தச்சை கணேசராஜாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு அவர் இடம்பெயரத் தயாராகிவிட்டார்.