தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மது விற்பனை தொடர்பாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் விரிவான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோதப் பதுக்கலைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்கள் அல்லது கூப்பன்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிக உறுதியாக உள்ளது.
தனிநபர் ஒருவர் வாங்கக்கூடிய மதுபானத்தின் அளவு குறித்து டாஸ்மாக் நிறுவனம் தற்போது தெளிவான வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லிட்டர் வரையிலான ‘ஹாட்’ வகை மதுபானங்களை (அதாவது 6 முழு பாட்டில்கள் அல்லது 12 அரை பாட்டில்கள் அல்லது 24 குவார்ட்டர் பாட்டில்கள்) வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பீர் வகைகளைப் பொறுத்தவரை 7.8 லிட்டர் (12 பாட்டில்கள்) வரையிலும், ஒயின் வகைகளை 9 லிட்டர் வரையிலும் மட்டுமே ஒருவர் வாங்க முடியும். இந்த அளவுகளைத் தாண்டி விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, கடைகளில் வைக்கப்பட வேண்டிய இருப்பு குறித்தும் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த இருப்பை விட 50 சதவீதத்திற்கு மேல் மதுபானங்களை வைத்திருக்கக் கூடாது என்றும், நடப்பு மாத விற்பனை முந்தைய விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை விற்பனை 30 சதவீதத்தைத் தாண்டினால் அது மொத்த விற்பனையாகக் கருதப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படும். இந்த அனைத்து விற்பனை விவரங்களும் கணினி வாயிலாகத் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
