ஆன்லைன் உணவு விநியோகச் சந்தையில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தைத் தொடர்ந்து, தற்போது ஸ்விக்கி நிறுவனமும் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சொமாட்டோ நிறுவனம் தனது லாப வரம்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரு ஆர்டருக்கான பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ. 12.50-லிருந்து ரூ. 14.90-ஆக அண்மையில் உயர்த்தியது. இதனைப் பின்பற்றி ஸ்விக்கி நிறுவனமும் தற்போது தனது கட்டணத்தை ரூ. 14.99-லிருந்து ரூ. 17.58-ஆக அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இதனால் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் இந்த ஆன்லைன் உணவு விநியோகச் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய தொடர் கட்டண உயர்வுகள் நடுத்தர வர்க்கத்தினரைப் பெரிதும் பாதித்துள்ளன.
ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள சூழலில், டெலிவரி நிறுவனங்களும் அடுத்தடுத்து சேவைக்கட்டணத்தை உயர்த்துவது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இக்கட்டண உயர்வு சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
