“அமெரிக்காவையே அதிரவைத்த டிரம்ப்”… 100 ஆண்டுகால மரபை உடைத்த ‘தங்க நாணயம்’… உலக நாடுகளே உற்று நோக்கும் அதிர்ச்சி மாற்றம்…!

By Nanthini on பங்குனி 23, 2026

Spread the love

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை நாணயங்களில் பொறிப்பதில்லை என்ற நூற்றாண்டு கால மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மரபை உடைக்கும் விதமாக, தனது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு தங்க நாணயத்தை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இது வெறும் பணப்புழக்கத்திற்கான காசு அல்லாமல், சேகரிப்பாளர்களுக்கான ஒரு நினைவுப் பொருளாக (Commemorative Coin) இருக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு புறம் அதிபர் ட்ரம்ப் மிகுந்த தன்னம்பிக்கையுடன் மேஜை மீது கைகளை ஊன்றி நிற்கும் தோற்றமும், மறுபுறம் அமெரிக்காவின் கம்பீரமான கழுகுச் சின்னமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் ‘LIBERTY’ (சுதந்திரம்) என்ற சொல்லும், 1776 முதல் 2026 வரையிலான ஆண்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1926-ல் அமெரிக்காவின் 150-வது சுதந்திர தினத்தின் போது அதிபர் கால்வின் கூலிட்ஜ் உருவம் பொறிக்கப்பட்டதற்கு பிறகு, சரியாக 100 ஆண்டுகள் கழித்து இப்போது ட்ரம்ப்பின் உருவம் இத்தகைய கௌரவத்தைப் பெறுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

   

இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்னர்களும் சர்வாதிகாரிகளும்தான் தங்களது உருவத்தை நாணயங்களில் பொறித்துக் கொள்வார்கள் என்றும், ஜனநாயக நாட்டில் தலைவர்கள் இத்தகைய நடைமுறைகளைத் தவிர்ப்பதே முறை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். தங்களை ஒரு மன்னராக நிலைநிறுத்திக் கொள்ளும் இத்தகைய செயல்கள் அமெரிக்காவின் ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது என்பது அவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இதன் விளைவாக, தற்போது அமெரிக்காவில் இது தொடர்பான புதிய சட்டப்போராட்டம் வெடித்துள்ளது.

   

மறுபுறம், கருவூலச் செயலருக்கு இத்தகைய நினைவு நாணயங்களை வெளியிடும் அதிகாரம் சட்டப்படி உண்டு என அரசு அதிகாரிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்தத் தங்கக் காசுகள், சேகரிப்பாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் கால் நூற்றாண்டு கால சுதந்திர வரலாற்றில், ட்ரம்ப்பின் இந்தத் துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய முயற்சி, 2026 ஜூலை 4 கொண்டாட்டங்களை இப்போதே சூடுபிடிக்க வைத்துள்ளது.