தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் த. பாலசுப்பிரமணியன் மேற்கொண்டுள்ள அதிரடி அரசியல் நகர்வுகள் அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஜக என்பது ‘சங்க பரிவார்’ என்றும், தங்களது அமைப்பு ‘இந்து பரிவார்’ என்றும் புதிய விளக்கத்தை அளித்துள்ள அவர், பாஜக சாதி அரசியல் செய்வதாகவும், ஆனால் இந்து மகா சபா சமத்துவ அரசியலை முன்னெடுப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக இந்துத்துவத்திற்கு எதிரான கட்சி என்றும், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் தங்களைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் கைவிட்டுவிட்டதாகவும் த.பா.ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும் 105 இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அவர், முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் திராவிடக் கட்சிகளில் இருக்கும் இந்துக்களைச் சுட்டிக்காட்டி பாஜகவின் இந்துத்துவ அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள இவரது இந்த நிலைப்பாடு, வரும் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
