தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகக் கூறப்படும் புகார்களை அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது விழாவில் பேசிய அவர், தவெக கட்சி பா.ஜ.க-வின் ‘பி டீம்’ எனச் சொல்லப்படுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று குறிப்பிட்டார்.
இது குறிப்பாக, டெல்லியில் பா.ஜ.க தலைவர்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், இது போன்ற வதந்திகளை தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளுமே திட்டமிட்டுப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, பா.ஜ.க-வுடன் தவெக இணக்கமாக இருந்திருந்தால் படம் எப்போதோ தடையின்றி வெளியாகியிருக்கும் என்று வாதிட்டார்.
இந்நிலையில் “விஜய் மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்கும் அவர் 1500 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருப்பார்” என்று அவர் பேசினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தங்கள் கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
