பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நண்பனையே சக நண்பர்கள் இருவர் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19-ஆம் தேதி பள்ளி முடிந்து விளையாடச் சென்ற ஹிமான்ஷு என்ற சிறுவன் மாயமான நிலையில், வயல்வெளியில் அவனது உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஹிமான்ஷு கொடுத்த தகவலால் அவனது நண்பர்கள் பிடிபட்டு தண்டனை பெற்றதாகவும், அதற்குப் பழிவாங்கவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்தது.
பள்ளி மாணவர்களான அந்த இரு நண்பர்களும், ஹிமான்ஷுவை நயவஞ்சகமாகத் தனியான இடத்திற்கு வரவழைத்து, அவனது கை கால்களைக் கட்டிப் போட்டுச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ரீல்ஸ் செய்து வந்த நண்பர்களே, பழைய பகையை மனதில் வைத்து இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குற்றவாளிகளான அந்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ள போலீஸார், கொலைக்குச் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
