பிரபல நட்சத்திர தம்பதிகளான கருணாஸ் – கிரேஸ் ஆகியோரின் மகனான கென், ‘ரெட்டச்சுழி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கலைஞராக முத்திரை பதித்துள்ளார். ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ போன்ற படங்களில் இவரது சீரியஸான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இருப்பினும், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களே தன்னைத் தேடி வந்ததால், தனது பன்முகத்தன்மையை நிரூபிக்க ‘யூத்’ படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கோவையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திரையரங்கிற்குச் சென்ற கென், செய்தியாளர்களிடம் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு ஆரம்பத்தில் இயக்குநராகும் ஆசை இல்லை என்றும், ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காததாலேயே ‘யூத்’ படத்தை இயக்கியதாகவும் அவர் கூறினார். “தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க முடியாது; என்னால் ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என்பதைக் காட்டவே இந்தப் படத்தை எடுத்தேன்” என்று குறிப்பிட்ட அவர், சென்சார் போர்டு இந்த முயற்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கென், தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “எங்க அப்பா சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பயணித்து வருகிறார். ஆனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அவர் வாழ்ந்த வாழ்க்கையும், எனது வாழ்க்கையும் முற்றிலும் வேறுபட்டது” என்று மிகத் தெளிவாகக் கூறினார். தற்போது ‘யூத்’ படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்த அவர், இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாகத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
