தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ மீது திரும்பியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களைப் பின்புலமாகக் கொண்டு, எவ்விதக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிடும் விஜய்யின் இந்த அதிரடி முடிவு, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் நிலவி வரும் குளறுபடிகளும், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களாகக் கருதப்படும் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 234 தொகுதிகளுக்கும் 3,000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் அதிகாரமிக்க குழு, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆரம்பகாலம் முதலே விஜய்க்காகக் களத்தில் நின்ற அடிமட்டத் தொண்டர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் நேர்காணலுக்குக் கூட அழைக்காமல் புறக்கணிப்பது வேதனையளிப்பதாக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். “மாற்றம்” என்ற முழக்கத்தோடு வந்த விஜய், மற்ற திராவிடக் கட்சிகளைப் போலவே பண பலம் உள்ளவர்களுக்கே சீட் கொடுக்கிறாரா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக விஜய்யின் விசுவாசிகளாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜே.சி.டி பிரபாகர் போன்றோரின் ஆதரவாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. மேலும் மரிய வில்சன், வெங்கட்ராமன் போன்ற செல்வாக்கு மிக்க நபர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பெரும் தொழிலதிபர்களின் தலையீடு மற்றும் நிதிப் பங்களிப்பின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள், சாதாரணத் தொண்டர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே, விஜய்யின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியும். அவர் தனது விசுவாசமான ரசிகர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்போகிறாரா அல்லது மற்ற கட்சிகளைப் போலவே வெற்றிக்காகப் பண பலத்தையும், அதிகாரத்தையும் மட்டுமே நம்பிப் பயணிக்கப் போகிறாரா? என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்தத் தேர்தல் முடிவு விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களின் நம்பிக்கையையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
