தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் பெரும் சவாலாக மாறியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட கூடுதலாக 3 இடங்களைப் பெற்று, மொத்தம் 28 தொகுதிகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸின் இந்த பிடிவாதம் மற்ற கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), இந்த முறையும் 6-க்கும் அதிகமான இடங்களை ஒதுக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கறாராகத் தெரிவித்துள்ளது. திமுக 5 இடங்களை ஒதுக்க முன்வந்தும், அதனை ஏற்க மறுத்து இடதுசாரிகள் பிடிவாதமாக இருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது. இதனால், பழைய கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து ஒன்றைக் குறைத்து, அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்த திமுக முயன்று வருகிறது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டு 4 வெற்றிகளைப் பதிவு செய்த விசிக, தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியுள்ள நிலையில் இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்த்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவனிடம், “புதிய கட்சிகளின் வருகையாலும், மற்ற தோழமைக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய சூழலாலும் சற்று இறங்கி வர வேண்டும்” என முதல்வர் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள நிலவரப்படி, விசிகவிற்கு தமிழகத்தில் 6 இடங்களும், புதுச்சேரியில் ஒரு இடமும் என மொத்தம் 7 இடங்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க திருமாவளவன் சம்மதிப்பாரா அல்லது தனது கோரிக்கையில் உறுதியாக இருப்பாரா என்பது அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதுதான் தெரியவரும்.
இந்தத் தொகுதிப் பங்கீடு சிக்கல்களுக்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம் என உடன்பிறப்புகள் மத்தியில் புலம்பல் எழுந்துள்ளது. “காங்கிரஸ் அடம் பிடித்து கூடுதல் இடங்களைப் பெற்றதால்தான், இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் அதே பாணியைப் பின்பற்றி கூடுதல் இடங்களைக் கோருகின்றன” என திமுகவினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும், இன்று அல்லது நாளைக்குள் மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுடனான தொகுதி ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, கூட்டணியில் நிலவும் “பிரளயம்” முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
