ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி பகுதியைச் சேர்ந்த மங்களேஸ்வரி என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனையை நோக்கி அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவருக்குக் கடும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த மங்களேஸ்வரி, மேற்கொண்டு நடக்க முடியாமல் சாலையோரம் ஓரிடத்தில் அமர்ந்துள்ளார்.
மங்களேஸ்வரியின் இக்கட்டான நிலையை கவனித்த அங்கிருந்த இரண்டு பெண்கள், மனிதாபிமானத்துடன் ஓடி வந்து அவருக்கு உதவினர். மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே வலி அதிகமானதால், அந்தப் பெண்களின் உதவியுடன் சாலையோரத்திலேயே மங்களேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொதுவெளியில் திடீரென நடந்த இந்த பிரசவ சம்பவம், அந்தப் பகுதியில் இருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 அவசர ஊர்தி மற்றும் ‘Child Care’ ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், தாய் மற்றும் சேய்க்கு முதலுதவி அளித்து இருவரையும் பாதுகாப்பாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழலில் சமயோசிதமாகச் செயல்பட்டு உதவிய அந்தப் பெண்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
