தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடனான பேச்சுவார்த்தையில் மட்டும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால், மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், கடந்த முறை போட்டியிட்ட எண்ணிக்கையை விடக் குறையக் கூடாது என்பதில் சிபிஎம் கட்சி மிகவும் கறாராக உள்ளது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன. சிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளைப் போலவே சிபிஎம் கட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. ஆனால், “ஆறு தொகுதிகளில் ஒன்று குறைந்தால் கூட எங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம்” என்று சிபிஎம் நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புதிதாகக் கூட்டணியில் இணைந்த தேமுதிக போன்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு, நீண்ட காலத் தோழமைக் கட்சியான தங்களைப் புறக்கணிப்பதாக சிபிஎம் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.
இந்தச் சூழலில், திமுகவுக்கு மார்ச் 23ஆம் தேதியை சிபிஎம் கட்சி ஒரு முக்கியக் கெடுவாக விதித்துள்ளது. அன்றைய தினம் சிபிஎம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திற்கு முன்னதாக திமுக ஒரு சுமுகமான முடிவை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்தியுள்ளனர். ஒருவேளை திமுக தனது பிடிவாதத்தைக் குறைக்கவில்லை என்றால், தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து மாநிலக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவுகளை எடுக்கவும் சிபிஎம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
கூட்டணிக்குள் நிலவும் இந்த மோதல் போக்கைச் சரிசெய்ய திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை விட்டுக் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிபிஎம் கட்சியின் இந்த விடாப்பிடியான நிலைப்பாடு திமுகவுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. மார்ச் 23க்குள் இந்த இழுபறி நீங்கி தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா அல்லது கூட்டணியில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
