இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறனை இஸ்ரேல் முற்றிலும் அழித்துவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதல் 20 நாட்களைக் கடந்த நிலையில், ஜெருசலேமில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அமெரிக்காவுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) மூலம் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகு குறிப்பிட்டார். ஈரானின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் டிரோன் உற்பத்தி மையங்கள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ராணுவ பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஈரானின் கடல்சார் பாதுகாப்புக் கட்டமைப்புகளும், குறிப்பாக காஸ்பியன் கடல் பகுதியில் உள்ள அதன் கடற்படையும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் உலக நாடுகளை ஈரான் பிளாக்மெயில் செய்ய நினைப்பதாகவும், அது ஒருபோதும் பலிக்காது என்றும் நெதன்யாகு எச்சரித்தார். இதற்கு மாற்றாக அரேபிய தீபகற்பம் வழியாக இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு எரிபொருள் குழாய்களை அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நெதன்யாகு உரையாற்றிக் கொண்டிருந்த போதே இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததால் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன. ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கியப் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆட்சி மாற்றம் என்பது ஈரானிய மக்களின் கைகளிலேயே உள்ளது என்றும், தரைவழித் தாக்குதலுக்கான வாய்ப்புகளையும் இஸ்ரேல் பரிசீலித்து வருவதாகவும் நெதன்யாகு தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.
