கேரளாவில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது தேனிலவு பயணத்திற்காகத் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. எர்ணாகுளம் குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அந்த இளம் ஆசிரியைக்கு, வரும் மார்ச் 29-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் லடாக் பகுதிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்ட அவர், அதற்காகச் சுமார் 1.15 லட்சம் ரூபாய் செலவில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளார்.
தேர்தல் காலம் என்பதால் அரசு ஊழியர்களுக்குத் தேர்தல் பணி கட்டாயமாக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, ஆசிரியர்களுக்கு இதில் முக்கியப் பங்கு அளிக்கப்படும். ஒருவேளை தனக்குத் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுவிட்டால், பல மாதங்களாகத் திட்டமிட்ட கனவுப் பயணமும், அதற்காகச் செலவு செய்த பெரும் தொகையும் வீணாகிவிடுமே என்ற அச்சம் அந்த ஆசிரியையைத் தொற்றிக்கொண்டது. வழக்கமாகப் பணி நியமனம் வந்த பிறகு விடுப்பு கோருவதற்குப் பதிலாக, முன்கூட்டியே ஒரு தீர்வை காண அவர் முடிவு செய்தார்.
இதற்காக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் உமேஷ் அவர்களை நேரில் சந்தித்த அந்த ஆசிரியை, ஒரு உருக்கமான மனுவை அளித்தார். அதில், தனது திருமணப் பத்திரிகை, லடாக் பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு ரசீதுகள் ஆகியவற்றை ஆதாரங்களாக இணைத்திருந்தார். “கஷ்டப்பட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் இந்தத் தேனிலவு பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம், தயவுசெய்து தேர்தல் பணியிலிருந்து எனக்கு விலக்கு அளித்து எனது மகிழ்ச்சியைக் காக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்வாக ரீதியாகத் தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிப்பது கடினமான காரியம் என்றாலும், அந்த ஆசிரியையின் துணிச்சலையும் வெளிப்படையான கோரிக்கையையும் பார்த்த ஆட்சியர், புன்னகையுடன் அதனைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். பொதுவாகத் தேர்தல் நேரத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி ஊழியர்கள் தப்பிக்க முயலும் நிலையில், ஒரு ஆசிரியை தனது வாழ்வின் முக்கியத் தருணத்திற்காக உண்மையைச் சொல்லி முறையிட்டது கேரளாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
