தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடக் மாவட்டம் கோட்பாக் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (35). கணவரை இழந்த இவர், தனது மகன் ராஜேஷுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த சுலோச்சனாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறவே, இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்ததோடு கணவன்-மனைவி போலவே பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜிக்கு தன்னுடன் வேலை செய்யும் புலி என்ற பெண்ணுடன் புதிதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுலோச்சனாவுக்கு தெரியவரவே, அவர் ராஜிவை கடுமையாக கண்டித்துள்ளார். புலியுடனான உறவை கைவிடுமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ராஜி, தனது புதிய காதலியான புலியுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்டார். தங்களுக்கு இடையூறாக இருக்கும் சுலோச்சனாவை தீர்த்துக்கட்ட இருவரும் சேர்ந்து ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினர்.
அதன்படி, கடந்த மார்ச் 10-ஆம் தேதி இரவு சுலோச்சனாவிடம் சமாதானமாகப் பேசிய ராஜி, புலியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக உறுதியளித்தார். பின்னர், சுலோச்சனா மற்றும் புலி ஆகிய இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாகசனப்பள்ளி பாலம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கு மூவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, திட்டமிட்டபடி ராஜி மற்றும் புலி ஆகிய இருவரும் சேர்ந்து சுலோச்சனாவை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் தனது தாயைக் காணவில்லை என்று மகன் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். நாகசனப்பள்ளி பாலம் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜி மற்றும் புலி மீது சந்தேகம் வலுத்தது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, சுலோச்சனாவைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
